தினமலர் 09.02.2010
ஓட்டல், பேக்கரியில் ‘ரெய்டு‘ : சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி
பொள்ளாச்சி : ஓட்டல், பேக்கரி, மளிகை கடைகளில் நேற்று நகராட்சி சுகாதாரப்பிரிவினர் “ரெய்டு‘ நடத்தி கலப்பட உணவு பொருட்கள் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி, மளிகைகடைகள் மற்றும் உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகளில் காலாவதியான பொருட்களும், கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களும் விற்பனை செய்வதாக நகராட்சிக்கு புகார் வந்துள்ளது.நகராட்சி கமிஷனர் வரதராஜ் உத்தரவின் பேரில், உணவு ஆய்வாளர்கள் சுப்புராஜ், மோகனரங்கன், கோவிந்தராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள் “ரெய்டு‘ நடத்தினர்.பொள்ளாச்சியில் கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, மார்க்கெட் ரோடு, பெருமாள் செட்டி தியில் உள்ள பேக்கரி, டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், மொத்த விற்பனையாளர்களிடம் “ரெய்டு‘ நடத்தினர். உணவு பொருட்களில் கலப்படம் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்தனர்.மொத்தம் 22 இடங்களில் ரெய்டு நடத்தி, மசாலாபொடி, மிளகு, டீத்தூள் போன்றவற்றை மாதிரி எடுத்து சீல் வைத்தனர். மார்க்கெட் ரோட்டில் ரெய்டு நடத்திய போது, காலாவதியான 30 கிலோ மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.