தினமணி 10.02.2010
கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம், வழக்கு
கடையநல்லூர், பிப். 9: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில், கடையநல்லூரிலுள்ள பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாயை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கால்வாய்களில் குப்பை, கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும் என்று நகராட்சி எச்சரித்துள்ளது.
கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து பாப்பான்கால்வாய் மற்றும் சீவலன்கால்வாயை சுத்தம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் 30 பணியாளர்கள் மூலம் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியினை நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், ஆணையர் அப்துல்லத்தீப், இளநிலைப் பொறியாளர் அகமதுஅலி, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையாபாஸ்கர், கைலாசசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.
அபராதம்: கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டினாலோ, கழிவறை கழிவுகளை நேரடியாக விட்டாலோ அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும், நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என நகராட்சி அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.