தினமலர் 16.02.2010
தினமலர் ‘ஜெயித்துக் காட்டுவோம்‘ போல் சென்னை மாநகராட்சி வழிகாட்டி நிகழ்ச்சி
சென்னை :””பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, “தினமலர்‘ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிகளை நடத்தியது போல், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் படும்,” என்று மேயர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மேயர் சுப்பிரமணியன் பங் கேற்று, இலவச சீருடைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 730 மாணவ, மாணவியருக்கு இரண்டு கோடியே 19 லட்சம் மதிப்பில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.அரசின் சார்பில் ஒரு சீருடை வழங்கினாலும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மாநகராட்சி சார்பில் ஒரு செட் சீருடை வழங் கப்படுகிறது. கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் சீருடை துணிகள் வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.மாநகராட்சி தொடக்கப் பள்ளி களில் படிக்கும் 35 ஆயிரத்து 447 மாணவ, மாணவியருக்கு ரூபாய் 27 லட்சத்து 68 ஆயிரம் செலவில் இலவச ஷூக்கள் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறும்.
மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு, “லேப்–டாப்‘ வழங்கப்படுகிறது.அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், மூன்று கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் 1,224 கம்ப்யூட்டர் வழங்கப்படும். இதற்காக 248 பள்ளிகளைச் சார்ந்த 1,945 ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப் பட்டது.வரும் 18ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், 21 கோடி ரூபாய் மதிப்பிலான 88 திட்டப் பணிகளை துவக்க உள்ளார். நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தொடக்கக் கல்வியும் தொடங்கப் படும்.பொதுத் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெறவும், மாணவர்கள் தேர்வு பயத்தை போக்கவும், “தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்‘ நிகழ்ச்சிகளை நடத்தியது.
அதுபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு தேர்வு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அடுத்த வாரம் நடத்தப் படும்.மாநகராட்சியின் சுகாதாரத் துறை சார்பில், வரும் 20ம் தேதி சென்னையில் 30 இடங்களில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.இதில் அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து மகளிருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர் (கல்வி) பாலாஜி, எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, கவுன்சிலர்கள், கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.