தினமணி 16.02.2010
கொடைக்கானலில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம்: துணை முதல்வர் பேச்சு
கொடைக்கானல், பிப். 15: கொடைக்கானல் நகரில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் ரூ.5 கோடியே 5 லட்சம் செலவில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார்.
புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:
கொடைக்கானலில் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லாத சூழ்நிலை இருந்தது. இதனால் பஸ்களை சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கும் நிலை இருந்ததால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. பொதுமக்களுக்கு மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.
இதனைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டினரும் ரசிக்கக் கூடிய வகையில் நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, எனக்கு உள்ளாட்சித் துறை வழங்கப்பட்டது. மக்களுக்குத் துணை நிற்பதற்காக துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டையில் மட்டுமே இருந்துகொண்டு மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வருகிறேன். கடந்த 2006-ல் இந்த பஸ் நிலையத்துக்கு நான் அடிக்கல் நாட்டினேன். இப்போது திறப்பு விழா காணும்போது மகிழ்ச்சியடைகிறேன்.
திமுக ஆட்சியில் கொடைக்கானல் நகராட்சியில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 1383 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.13 கோடியே 73 லட்சம் செலவில் 217 பணிகள் முடிவடைந்துள்ளன. நகரில் தினசரி குடிநீர் வழங்க குழாய்கள் அமைத்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரூ.87 கோடியே 54 லட்சம் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.வி.சித்தன், ஞானதேசிகன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், ஒன்றியத் தலைவர் அப்துல் ரசாக், நகர்மன்ற உறுப்பினர்கள், நகரச் செயலர் மாயன், மகளிர் சுய உதவிக் குழுவின உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் நன்றி கூறினார்.