தினமலர் 18.02.2010
மேல்நிலை தொட்டி, வடிகாலுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பூமி பூஜை
பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வடிகால் கட்ட பூமி பூஜை நடந்தது. “பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4வது காந்தி நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும், 14வது வார்டில் வடிகாலும் அமைக்க வேண்டும்‘ என, கோரிக்கைவிடப்பட்டது.
தொடர்ந்து எம்.பி.,யிடம் இது குறித்து மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி னது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க 2.40 லட்சம் ரூபாய், 14வது வார்டு காட்டுக்காரர் வீதியில் வடிகால் கட்ட 1.60 லட்சம் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பூமி பூஜை விழா ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் நடந்தது. டவுன் பஞ்சாயத்து சேர்மன் யுவராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கோவிந்தராஜூ வரவேற்றார். எம்.எல்.ஏ., தங்கமணி முன்னிலை வகித்தார். எம்.பி., கணேசமூர்த்தி பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை தலைவர் தனசேகரன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.