தினமலர் 24.02.2010
ஆடு இறைச்சி கடைகளில் பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள் ‘ரெய்டு‘
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆடு இறைச்சி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். பெரம்பலூர் நகரில் ஆடு இறைச்சியை வெட்டுவதற்காக இருபது லட்சம் ரூபாய் செலவில் வடக்குமாதவி சாலையில் ஆடு இறைச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆடு இறைச்சி விற்பனை செய்வோர் இங்கு கொண்டு வந்து கால்நடை மருத்துவரிடம் ஆட்டை காண்பித்து அதை வெட்டித்தோல் உரித்த பிறகு ஆட்டுத் தொடையில் மருத்துவரால் சீல் வைத்தப்பின்பு விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆடு இறைச்சி விற்பனையாளர்கள் விதிமுறைகளை மீறி ஆடுகளை தங்களது விற்பனை கூடத்திலேயே அறுத்து விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் வெங்கடாஜலம் தலைமையில், துப்புறவு பணி மேற்பார்வையாளர் கணேசன், களப்பணி உதவியாளர் பன்னீர்செல்வம், துப்புரவு ஆய்வாளர் முருகன் மற்றும் துப்புறவு பணியாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட், வடக்குமாதவி சாலை, துறைமங்கலம் நான்குரோடு, துறையூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஒன்பது கடைகளை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, விதிமுறை மீறி “சீல்‘ வைக்காமல் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடையுள்ள ஆட்டு இறைச்சியை நகராட்சிக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.