தினமலர் 25.02.2010
ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : மதுரை குருவிக்காரன் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கு:
அண்ணாநகர் குருவிக்காரன் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் பார் செயல்படுகிறது. இந்த பார் செயல்படும் இடத்தின் வழியாக கழிவு நீர் கால்வாய் ஓடுகிறது. பார் ஆக்கிரமித்து உள்ளதால், பக்கத்திலுள்ள குடியிருப்பு பகுதியினருக்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.இவ்வழக்கு நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராஜாராமன் ஆஜரானார். மாநகராட்சி வக்கீல் சுரேஷ்குமார், “”குருவிக்காரன்சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான சர்வே எண் 84/1ஜெ2ல் உள்ள இடத்தில் சில ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். அதை பதிவு செய்த நீதிபதிகள், “”மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்,”என உத்தரவிட்டனர்.