தினமலர் 26.02.2010
கடையநல்லூரில் வீட்டுவரி உயர்வு சென்னையில் 5ம் தேதி முகாந்திர கூட்டம்
கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சியில் வீட்டுவரி உயர்த்தப்பட்டது தொடர்பாக சென்னையில் மார்ச் 5ம் தேதி சிறப்பு முகாந்திர கூட்டம் நடத்தப்படுவதாக பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் வரிநிர்ணயம் செய்யப்பட்ட போது சுமார் 500 குடியிருப்புகளுக்கு வீட்டு வரி உயர்வு பலமடங்குகளாக உயர்த்தப்பட்டதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்திட அதிகாரிகள் குழு கடையநல்லூர் பகுதிக்கு வருகை தந்தனர். இருந்த போதினும் பலமடங்கு உயர்த்தப்பட்ட வரி உயர்வினை மறுஆய்வு செய்ய வேண்டுமென முக்கிய அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து நிர்ணயத்தில் பாதிக்கப்படுவதாக கூறப்படும் குடியிருப்போர்களை கொண்ட முகாந்திர கூட்டம் நடத்திட துணை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையருடன் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர், நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் மார்ச் 5ம் தேதி சென்னையில் வரி நிர்ணயம் தொடர்பான சிறப்பு முகாந்திர கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் முன்னிலையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரி உயர்த்தப்பட்டதாக தெரிவித்து வரும் குடியிருப்போரும் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.