தினமணி 17.07.2009
கணினிகளுக்கு இணையதள இணைப்பு
கோவை, ஜூலை 16: கோவை மாநகராட்சி பள்ளிகளில் இருக்கும் கணினிகளுக்கு இணையதள இணைப்பு வழங்க கல்விக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநகராட்சி கல்விக்குழுக் கூட்டம் குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநகராட்சி கல்வி அலுவலர் ராபர்ட் கருணாகரன் முன்னிலை வகித்தார்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோவை மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, கல்வி அலுவலர் அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் பள்ளி கணினிகளுக்கு “பிராட் பேன்ட்‘ இணைய இணைப்பு வழங்க வேண்டும். துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாநகராட்சி நிதியில் “மேத்ஸ் கிட்‘ வழங்க வேண்டும்.
வ.உ.சி. வனஉயிரின பூங்காவில் அயல்பணி அடிப்படையில் மருத்துவரை பணிநியமனம் செய்ய வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதுடன், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
அனுப்பர்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி புத்தகங்கள் படிக்கும் வகையில் இணையதள வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கல்விக்குழு உறுப்பினர்கள் சோபனா செல்வன், வி.கே.எஸ்.கே.செந்தில்குமார், கே.செல்வராஜ், எஸ்.மீனா லோகநாதன், நகரமைப்பு அலுவலர் செüந்திரராஜன், மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர்கள் க.சுகுமார், பா.கணேஷ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.