தினமணி 03.03.2010
கோவை மாநகராட்சி மார்க்கெட் கட்டணங்கள் குறைப்பு
கோவை, மார்ச் 2: வியாபாரிகள், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள், சரக்குகள் கொண்டுவரும் வாகனங்ளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சியின் தடாகம் சாலை வாழைக்காய் மண்டி, மேட்டுப்பாளையம் சாலை அண்ணா தினசரி மார்க்கெட், எம்ஜிஆர் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட்களுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கட்டணம் உயர்த்தப்பட்டது.
வியாபாரிகள், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து , தற்போது இந்த மார்க்கெட்களுக்கு வரும் லாரிகள் நடை ஒன்றுக்கு ரூ.35, வேனுக்கு ரூ.20, ஆட்டோவுக்கு ரூ.10, மாட்டு வண்டிக்கு ரூ.6 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவிர இருசக்கர வாகனங்கள், சைக்கிள் ஆகியவற்றுக்கு ரூ.2 என வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது பேசிய மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் சி.பத்மநாபன், “மாநகராட்சி மார்க்கெட் பராமரிப்பை ஏலம் விடுவதற்குப் பதிலாக மகளிர் குழு அல்லது தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கலாம்‘ என்றார்.
இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் குழுத் தலைவர் புருஷோத்தமனும் வலியுறுத்தினார். வியாபாரிகள், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கட்டணத்தை குறைத்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் வெ.ந.உதயகுமார் நன்றி தெரிவித்தார்.