தினமலர் 11.03.2010
ஜவஹர்லால் நேரு திட்டத்துக்கு பதில் புதிய திட்டம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
திருச்சி: “”மத்திய அரசின் ஜவஹர்லால்நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டத்தில் திருச்சி மாநகராட்சி சேர்க்கப்பட்டு, நிதி மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கவுள்ளது,” என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கூறினார். திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் கமிஷனர் பால்சாமி பேசியதாவது: திருச்சி பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடு இருப்பதாக கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், மாநகராட்சி பட்ஜெட் காகிதப்பூ அல்ல. உண்மையிலேயே மணக்கும் மல்லிகைப்பூ தான். புதிய வரி இல்லாததுடன், சுமை இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. “கவுன்சிலர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்‘ என்று கூறினர். பட்ஜெட் புத்தகமே வெள்ளையாக இருப்பதால் தனியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியதில்லை. கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று நவம்பரில் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் வெளியிடப்பட உள்ளது. மாநகராட்சியில் 169 கோடி ரூபாயில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நடந்துவருகிறது. மற்ற மாநகராட்சி போல் இல்லாமல் திருச்சி மாநகராட்சியில் பல்வேறு அடிப்படைப்பணிகள் நடந்துவருகிறது. இதுதவிர, திருச்சி மாநகராட்சியில் நவீன மீன்சந்தை அமைக்க மீன்வளத்துறை இரண்டரை கோடி ரூபாய் அளித்துள்ளது. தொடர்ந்து நவீன மீன் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
மாநகரில் பாதாளசாக்கடை திட்டப் பணியும், 24 கோடியே 36 லட்சத்தில் சாலைப்பணியும் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து 100 கோடி ரூபாயில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணிகள் நிறைவடைந்தால் திருச்சி மாநகராட்சியில் சாலை அமைக்க வேண்டிய பணியே இருக்காது என்ற நிலை உருவாகும். மத்திய அரசின் ஜவஹர்லால்நேரு தேசிய புணரமைப்பு திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சியையும் சேர்க்க வலியுறுத்தி விரிவான திட்ட அறிக்கையும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் மக்கள் தொகை குறைவு என்ற காரணத்தால், புதிய பெயரிலான திட்டத்தில் திருச்சி மாநகராட்சி சேர்க்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தமிழக பட்ஜெட்டில் முறையாக அறிவிக்கப்படும். மாநகராட்சியிலுள்ள அனைத்துத் தெருவிளக்குகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை, ஒரு பகுதி மட்டும் சோதனை முறையில் தனியாரிடம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்படும். கோவை, மதுரை மாநகராட்சியில் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலையுள்ளது. ஆனால், திருச்சி மாநகராட்சியில் முறையாக இந்தப்பணிகள் நடந்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.