தினமணி 11.03.2010
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: மாநகராட்சி பள்ளி மாணவியருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
மதுரை, மார்ச் 10: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
மதுரை மாநகராட்சி கல்தூண் மண்டபத்தில் இந்த முகாமை தொடங்கிவைத்து ஆணையர் கூறியது:
மதுரை மாநகராட்சியின் 24 பள்ளிகளைச் சார்ந்த, 10}ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறும் 100 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு, மகால் அருகில் உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 10 நாள்களாக நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. இப் பயிற்சி வகுப்பு 10}ம் வகுப்பு தேர்வு முடியும் வரை நடைபெறும்.
இதேபோன்று, 450 மதிப்பெண்களுக்கு மேல் பெறக்கூடிய மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மாநில அளவில் முதலிடம் பெறும் வகையில், பாடம் வாரியாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12}ம் வகுப்பு மாணவ, மாணவியர் முதல் 20 இடங்கள் பெறுவோருக்கு, மேல்படிப்பு மற்றும் இதர சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12}ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளியின் 11 மாணவ, மாணவியருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி ஊக்குவித்தார். அதுபோல் இந்தாண்டு அதிக மதிப்பெண் பெறுவோர் ஊக்குவிக்கப்படுவர்.
ஆகவே, மாணவ} மாணவியர் 10}ம் வகுப்புத் தேர்வில் நன்கு பயின்று அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று மதுரை மாநகராட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியர் பாலாஜி, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன், கல்வி அலுவலர் அம்மையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.