தினமணி 11.03.2010
நகராட்சியால் 7 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட அம்மன் சிலை பக்தர்களிடம் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி, மார்ச் 10: கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகத்தால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட அம்மன் சிலைகள் உட்பட 9 சிலைகளை நகராட்சி தலைவர் பரிதா நவாப் பக்தர்களிடம் புதன்கிழமை வழங்கினார்(படம்).
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையமானது கடந்த 2003-ம் ஆண்டு லண்டன்பேட்டை சின்னஏரியில் கட்டப்பட்டது. புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு முன்பு அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் மற்றும் கோயில்கள் அகற்றப்பட்டன.
அப்போது அப்பகுதியில் இருந்த அம்மன் கோயில் இடிக்கப்பட்டு, அங்கிருந்த அம்மன் சிலை உட்பட 9 சிலைகளைக் கையகப்படுத்தியது.
அச் சிலைகள் கடந்த 7 ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், இச்சிலைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். அதன்படி சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டன பின்னர் அச்சிலைகளை பக்தர்களிடம் நகர்மன்றத் தலைவர் ஒப்படைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பௌலோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.