தினமலர் 12.03.2010
விக்டோரியா ஹால் சீரமைப்பு பணிகள் 18 மாதத்தில் முடியும்: ஸ்டாலின் தகவல்
சென்னை : “”விக்டோரியா பப்ளிக் ஹாலை மூன்றுகோடி மதிப்பில் கலைநயம் மாறாமல் புனரமைக்கும் பணிகள் 18 மாதத்தில் முடிக்கப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகே உள்ள,”விக்டோரியா பப்ளிக் ஹால்‘ புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பணிகளை துணைமுதல்வர் ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு செய்தார்.
பின் நிருபர்களிடம் கூறியதாவது:விக்டோரியா பப்ளிக் ஹால் வரலாற்று சிறப்பு மிக்க புராதன கட்டடம். 1888ல் நம்பெருமாள் செட்டி என்பவரால் கட்ட தொடங்கப்பட்டு, 1890ல் முடிக்கப்பட்டது.இந்த ஹால் 56 கிரவுண்ட் பரப்பில் அமைந் துள்ளது. இந்த கட்டடம் புனரமைக்கப்பட்டு, 1967ல் முதல்வர் அண்ணாத் துரையால் திறந்து வைக்கப்பட்டது.இங்கு சுவாமி விவேகானந்தர், பாரதியார், காந்தியடிகள், கோபால கிருஷ்ண கோகலே போன்ற தலைவர்கள் பேசியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக விக்டோரியா ஹால் எந்த பயன்பாடுமின்றி இருந்தது.அறகட்டளையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கட்டடத்தின் கலை நயம் மாறாமல் புதுப்பிக்க மூன்று கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.கட்டடத்தின் மேற் கூரை, தரைதளம் மற்றும் சுவர்களை சீரமைக்கும் பணிகள் துவக்கப் பட்டுள்ளன. 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்படும். தரை தளத்தில் ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் நடத்தவும், முதல் தளத்தில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்தவும் அனுமதிக்கப் படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். ஆய்வின்போது மேயர் சுப்பிரமணியன், துணை முதல்வரின் செயலர் தீனபந்து, நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டி, கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.