தினமலர் 12.03.2010
பம்ப்செட் பொருத்தி குடிநீர் எடுத்தால் எச்சரிக்கை இணைப்பை துண்டிக்க நடவடிக்கை
விருதுநகர்: நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளில் பம்ப்செட் பொருத்தி குடிநீர் எடுத்தால் இணைப்பை துண்டிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.விருதுநகரில் 12 நாட்களுக்கு ஒருமுறை, திருத்தங்கலில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. பல கிராமங்களில் போதுமான குடிநீர் இல்லாததால், சீரான சப்ளை செய்ய முடியவில்லை. இதை தவிர்க்க விருதுநகர் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்த கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கலெக்டர் சிஜி தாமஸ் பேசியதாவது: மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடி நீர் திட்டத்தில் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு, கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும். சீராக மின்சாரம் வழங்க வேண்டும்.செட்டியார்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர் கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். வறட்சி நிவாரண பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். குடிநீர் வினியோகிக்கும் போது பல இடங்களில் பம்ப்செட் பொருத்தி குடிநீர் எடுப்பதால் மற்றவர்களுக்கு போதிய அளவு கிடைப்பதில்லை. இதை தடுக்க பம்ப்செட் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சினால் பம்ப்செட் பறிமுதல் செய்வதோடு, குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். குடிநீர் திருட்டு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.