தினமலர் 12.03.2010
மீனாட்சி கோயிலைச் சுற்றி உயரக்கட்டடங்கள் சட்ட விரோதமாக இருந்தால் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்
மதுரை: “”மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி, சட்ட விரோதமாக உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் எச்சரித்தார். மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு ஒப்புதல் (பிளான் அப்ரூவல்) பெற, விண்ணப்பங்களை தரும் முறை உள்ளது. இதற்குப் பதில் “ஆன்லைனில்‘ விண்ணப்பித்து,ஒப்புதல் பெறும் முறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையை மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் துவக்கினர். தலைமை பொறியாளர் சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், மண்டல தலைவர்கள், நகரமைப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இம்முறையை ஆன்லைனுக்கு கொண்டு வந்து, பராமரிக்கும் “வின்சாஸ் சொல்யூஷன்ஸ்‘ நிறுவனத்தை சேர்ந்த சிவா, கூறும்போது, “”மாநகராட்சி இணையதளத்தில் (மதுரை கார்ப்பரேஷன். ஓஆர்ஜி) இனிமேல் நேரடியாக சர்வே எண் மற்றும் கட்டடத்தின் அளவுகளை குறிப்பிட்டு பதிவு செய்து, ஒப்புதல் பெறலாம். மாநகராட்சி விதிமுறைகளுக்கு ஏற்ப இருந்தால், கட்டடத்திற்கு ஒப்புதல் கிடைக்கும். இல்லாவிட்டால், சந்தேகங்கள் கேட்கப்படும். அதற்கு பதில் அளித்த பிறகு, நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து, ஒப்புதல் தரப்படும்.
இதனால் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும். வாரம் ஒரு முறை, ஒப்புதல் பட்டியல் வெளியிடப்படும். ஒப்புதல் கட்டணத்தை தனியாக செலுத்த வேண்டும். இதுவும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வரப்படும்,” என்றார்.நகரமைப்பு அலுவலர் முருகேசன் கூறும்போது, “”இதற்காக நகரில் உள்ள அனைத்து சர்வே எண்களும் கம்ப்யூட்டரில் ஏற்றப்படும்,” என்றார். கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது:
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள உயரமான கட்டடங்களை இடிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பவில்லை. அப்படி நோட்டீஸ் அனுப்ப முடியாது. இவை எல்லாமே 30 ஆண்டுகளுக்கு முன் அனுமதி பெற்று கட்டப்பட்டவை. இவற்றை சட்டப்படி இடிக்க முடியாது. பாதுகாப்பு கருதி, இடிக்கலாம் என போலீசார் யோசனை மட்டும் கூறியுள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கட்டடங்கள் இருந்தால், போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்படும்.ஆன்லைன் கட்டட ஒப்புதலை முன்பு போல் விண்ணப்பித்தும் பெறலாம். அடுத்த ஆறு மாதங்களில் இம்முறை ஒழிக்கப்பட்டு, முழுக்க முழுக்க ஆன்லைன் முறை கொண்டு வரப்படும். இம்முறையால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவர். மூன்று நாட்களில் ஒப்புதல் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார