தினமலர் 18.03.2010
கோயம்பேடு மார்க்கெட் வளாக ஆக்கிரமிப்பு கடைகளுக்கு ‘சீல்‘: காய்கறி கடை பெயரில் நடத்தப்பட்ட டீ கடைகள் மூடல்
கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஆக்கிரமிப்பு கடைகளை, மார்க்கெட் நிர்வாக குழுவினர் நேற்று அதிகாலை அதிரடியாக அகற்றினர். காய்கறி விற்க உரிமம் பெற்று டீக்கடை நடத்திய மூன்று கடைகளுக்கு, ‘சீல்‘ வைத்தனர். அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளை போலீசார் அப்புறப்படுத் தினர்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழங்கள் என 3 ஆயிரத்து 194 கடைகளுக்கு உரிமம் வழங்கப் பட்டுள்ளன.மார்க்கெட்டிற்குள் லாரிகள் எளிதாக சென்று வர, காலியிடங்கள் அதிகளவில் விடப் பட்டுள்ளன.காலியிடங்களில் இலைக் கட்டு, தக்காளி வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் போட்டிருந்தனர்.
இதனால், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி தக்காளி வியாபாரி கிரிகுமார், ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றார். மார்க்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அவரது அலுவலர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சென்றனர்.மார்க்கெட் வளாக பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை, மார்க்கெட் நிர்வாக கமிட்டி அலுவலர்கள் அகற்றி, வாகனத்தில் ஏற்றிச் சென்று அலுவலகத்தில் வைத்தனர்.
திருமங்கலம் உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளை, போலீசார் எச்சரித்து அப்புறத்தினர்.இது குறித்து மார்க்கெட் நிர்வாக தலைமை அதிகாரி ராஜேந்திரன் கூறியதாவது:மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, அவர் களுக்கு வழங்கப்பட்ட லை சென்சை புதுப்பிக்க வேண்டும்.மொத்தமுள்ள மூன்றாயிரத்து 194 கடைகளில், இரண்டாயிரத்து 500 பேர் லைசென்ஸ் புதுப்பிக்க எங்களிடம் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள 900க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், லைசென்சை புதுப்பிக்காவிட்டால், கடைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும்.ஆக்கிரமிப்பு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட இலைக் கட்டுகள், தக்காளி மற்றும் காய்கறிகளை, வியாபாரிகளிடம் திரும்ப கொடுக்க இயலாது.அவற்றை, அனாதை குழந்தைகள் வசிக்கும் அலுவலகத்திற்கு இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.மூன்று கடைகளுக்கு ‘சீல்’: சென்னை மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதி ரோசாண்ட், துப்புரவு ஆய்வாளர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர் மாரிராஜ் தலைமையில் சென்ற மாநகராட்சியினர், மார்க்கெட் வளாகத்தில் இருந்த டீ, மிக்சர், ஓட்டல் கடைகளை ஆய்வு செய்தனர்.காய்கறி வியாபாரம் செய்வதற்காக அனுமதி பெற்ற இடத்தில், டீ மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு, ‘சீல்’ வைத்தனர்.