தினமலர் 19.03.2010
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மூன்று கடைகளுக்கு ‘சீல்‘
கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் தொடர்ந்து அகற்றப்படுகின்றன.நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை , மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் அகற்றினர். அவர்களுடன் இணைந்து, மாநகராட்சியினரும் களத்தில் இறங்கினர்.
மார்க்கெட் வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட கடைகள் மற்றும் மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் நடத்தப்பட்ட மூன்று கடைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர்.இந்த நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. மார்க்கெட் நிர்வாக தலைமை அதிகாரி ராஜேந் திரன் தலைமையில் சென்ற அதிகாரிகள், நூற் றுக்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதி ரோசலாண்ட் தலைமையில் சென்ற அதிகாரிகள், காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மூன்று கடைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர்.
இது குறித்து மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதி கூறியதாவது:காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்ய மார்க்கெட் கமிட்டியிடம் அனுமதி பெற்ற வியாபாரிகள், அக்கடையை வேறு சிலருக்கு லீசுக்கு விடுகின்றனர்.அவர்கள், காய்கறி வியாபாரம் செய்யாமல், ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்துகின்றனர். ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்த மாநகராட்சியிடம் லைசென்ஸ் பெற வேண்டும்.அவ்வாறு லைசென்ஸ் பெறாமல் செயல்பட்ட மூன்று கடைகளுக்கு முதல் நாள் சோதனையில் ‘சீல்‘ வைத்தோம். இரண்டாம் நாள் சோதனையில் மீண்டும் மூன்று கடைகளுக்கு ‘சீல்‘ வைத்துள்ளோம். இந்த நடவடிக்கை தொடரும்.இது தவிர 11 கடைக்காரர்கள் ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்த, மார்க்கெட் கமிட்டி அதிகாரியிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர்.ஆனால், அவர்கள் மாநகராட்சி லைசென்ஸ் பெறவில்லை. ‘லைசென்ஸ் பெறாமல் கடை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, 11 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள் ளோம்.இவ்வாறு ரேவதி கூறினார்.