தினமலர் 27.03.2010
குடிநீர் இணைப்பில் முறைகேடா : மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
திருப்பூர்: ‘குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்து, மின்மோட்டாரைப் பயன்படுத்தி நீரை உறிஞ்சினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கமிஷனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் இணைப்பை முறையாகப் பயன்படுத்த வேண்டும். குழாய்களில் இருந்து மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவது சட்டத்துக்கு புறம்பானது. அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய் இணைப்பை துண்டிப்பதுடன், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குழாய்களில் சரியான அடைப்பானை பயன்படுத்தி, வீணாவதை தடுக்க வேண்டும். குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் செலுத்தி, குடிநீர் குழாய் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் குடிநீர் தொடர்பான குறைகளை, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம். முதல் வார்டில் இருந்து 24வது வார்டு வரை 2247 052, 2201 872 என்ற எண்களிலும்; 25 முதல் 33வது வார்டு வரையிலும், 37முதல்40 வது வார்டு வரையிலும் 2249 154, 2208 976 என்ற எண்களிலும்; 34, 35, 36 வார்டுகள் மற்றும் 41வது வார்டு முதல் 52 வரையிலும் 2212 303 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம். இவ்வாறு, கமிஷனர் தெரிவித்துள்ளார்.