தினமணி 27.03.2010
மாநகராட்சிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தேர்தல்: 66 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்
பெங்களூர், மார்ச் 26: ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலில் 66 லட்சத்து 19 ஆயிரத்து 703 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
2001ம் ஆண்டுக்குப் பிறகு பெங்களூர் மாநகராட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை தான் தேர்தல் நடைபெறுகிறது. 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைந்தது. அப்போது மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. அதன் பிறகு மாநகராட்சியுடன் நகரின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 110 கிராம பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டன.
இதனால் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையும் 100ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பிறகு இப்போதுதான் முதன் முதலாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்த போராட்டத்துக்குப் பிறகு தேர்தலை மார்ச் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்த பிறகே தேர்தலை நடத்த மாநில அரசு முன்வந்தது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி மன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 66 லட்சத்து 19 ஆயிரத்து 703 பேர் வாக்களிக்கிறார்கள். வாக்காளர் எண்ணிக்கை இன்னும் சற்று அதிகமாகலாம். கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்தவர்கள் இந்த கணக்கில் வரவில்லை. தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி இப்போதையே வாக்காளர்கள் 66 லட்சம் பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 34 லட்சத்து 82 ஆயிரத்து 697 பேர். பெண் வாக்காளர்கள் 31 லட்சத்து 37 ஆயிரத்து 006 பேர்.
நகரிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட வார்டாக ஹொரமாவு வார்டு உள்ளது.
அந்த வார்டில் மொத்த வாக்காளர்கள் 63,516 பேர். அதுதவிர மேலும் 4 வார்டுகளில்50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி பேட்ராயன்புரம் வார்டில் 53,872 வாக்காளர்கள், ஹொங்க சந்திராவில் 52,053 பேர், பேகூரில் 51,214 வாக்காளர்கள், மற்றும் தனிசந்திராவில் 50,393 வாக்காளர்கள் உள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு வார்டில் அதிகபட்சம் 35 ஆயிரம் வாக்காளர்களுக்கு அதிமாக இருக்கக்கூடாது, அவ்வாறு இருந்தால் அந்த வார்டில் குறிப்பிட்டவாக்காளர்களை வேறு வார்டில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டும் 50 ஆயிரத்துக்கும் மேல் வாக்காளர்கள் உள்ளவாறு இந்த 5 வார்டுகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
மற்ற வார்டுகளில் குறைந்தபட்சமாக 18 ஆயிரம் வாக்காளர்களும் அதிகபட்சமாக 35 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர். இவற்றில் 9 வார்டுகளில் ஆண்
வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம். அவை வருமாறு: மாருதி சேவாநகர், சகாயபுரம், ஜெயமஹால், காடுமல்லேஸ்வரம், புலிகேசிநகர், ஹொய்சாளா நகர், சாந்தலா நகர், அகரம் மற்றும் வண்ணாரப் பேட்டை. மேலும் 10 வார்டுகளில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் ஏரக்குறைய சம அளவில் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 6,590 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மாநகராட்சி தேர்தலில் முதன்முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பணியில் 45,040 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் பலர் இந்தப் பணிக்கு புதியவர்கள். தற்போது எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற்று வருவாலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் பியூசி தேர்வு நடைபெறவுள்ளதாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதிதாக இதுவரை இந்தப்பணியில் ஈடுபடுத்தப்படாத அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் இப்போது ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு 3 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் துவங்கி இடைவிடாமல் மாலை 5 மணிவரை நடைபெறது. தேர்தல் பாதுகாப்புக்கு பெங்களூர் நகரில் மட்டும் 30 ஆயிரம் போலீஸôர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எந்தவித வன்முறையும் இன்றி தேர்தல் பிரசாரம் அமைதியாக நடந்து முடிந்தது.
இதற்கு முன் நடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் படித்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு 40 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, படித்தவர்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.