தினமணி 29.03.2010
மாநகராட்சி தேர்தல்: 45% வாக்குப்பதிவு
பெங்களூர், மார்ச் 28: வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் உள்பட சில குறைபாடுகளைத் தவிர பெங்களூர் பெருநகர மாகராட்சி மன்றத் தேர்தல் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது; 45 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
பெங்களூர் மாநகாரட்சி மன்றத்திற்கு கடைசியாக 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தது. அந்த மாநகராட்சி பதவிக்கலாம் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. அதன் பிறகு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமைதான் தேர்தல் நடந்தது.
மொத்தம் 198 வார்டுகளில் 1343 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகள் ஒன்றிரண்டு வார்டுகளைத் தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.
வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் துவங்கியது. சிவாஜிநகர் 29வது வாக்குச்சாவடி, ஹனுமந்தநகர் வாக்குச்சாவடி சுப்பிரமணிய நகர் வார்டு ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. ஹனுமந்தநகர் வார்டில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. அதுபோல் சிவாஜிநகர் வார்டில் 29வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
எச்.எம்.டி. வார்டில் 100 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்ட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாக்களிக்க வந்த அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அதுபோல் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியால் சில வாக்குச்சாவடிகள் முன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபோல் ஒரு சில சிறு அசம்பாவித சம்பவங்களைத் தவிர வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு அமைதியாக நடந்து முடிந்தது.
காந்திநகர், ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், விஜய நகர், கோவிந்தராஜ்நகர், சிவாஜிநகர்,
ஜெயமஹால், ஹெப்பால் உள்பட சில பகுதிகளில் மட்டுமே காலையில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடிகளில் கூட்டம் காணப்பட்டது.
ஆனால் சிவி ராமன்நகர், சாந்திநகர், கேஆர்புரம், யலஹங்கா, பின்னிப்பட்டை, புலிகேசி நகர், சர்வக்ஞர் நகர் உள்பட பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது.
பிற்பகல் 3 மணி அளவில் சராசரியாக 198 வார்டுகளிலும் 35 சதவிகித வாக்குகள்
பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு
, வாக்கு எண்ணும் இடங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு
வாக்குப் பதிவு முடிந்தபோது 198 வார்டுகளிலும் சராசரியாக 45 முதல் 47 சதவிகித வாக்குகள் பதவிவாகியிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 5ம் தேதி நடைபெறுகிறது.