தினமலர் 30.03.2010
மணப்பாறை நகராட்சியின் அடுத்த கூட்டம் ‘அமைதியாக‘ நடக்கும் : நிர்வாக மண்டல இயக்குனர் நம்பிக்கை
மணப்பாறை: அடுத்த நகராட்சி கூட்டம் அமைதியாக நடைபெறும் என மணப்பாறை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சாந்தி கூறினார்.
மணப்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று மாலை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சாந்தி திடீர் விசிட் செய்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலக கட்டட பணியை நேரில் பார்வையிட்ட பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:கடந்த 2 நாட்களுக்கு முன் திமுக கவுன்சிலர்கள் சிலர் உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்தேன். இதேபோல் தொடர்ந்து நடந்தால் கலெக்டர் மற்றும் நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த நகராட்சி கூட்டம் அமைதியாக நடைபெறும். நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தனியார் மூலம் துப்புரவு பணிக்கு ஆள் சேர்த்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இதையும் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது டாக்டர் இல்லாததால் பணிகள் தேக்க நிலையில் உள்ளது. விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ள மேலும் ஒரு வாகனம் வாங்கப்படும். நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மனமகிழ்மன்ற இடம் தற்போது வருவாய் துறையிடம் உள்ளது. அதனை திரும்பபெற நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. குடிநீர் பிரச்னையில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது ஆணையர் அருணாச்சலம், இன்ஜினியர் குணசேகரன் ஆகியோர் இருந்தனர். முன்னதாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள பயனற்று கிடக்கும் லாரி, குப்பை தொட்டி மற்றும் இரும்பு பொருட்கள் அனைத்தையும் பார்வையிட்ட அவர் உடனே அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டார.