தினமணி 21.07.2009
குடிநீர் திட்டப் பணிகள்: நகராட்சி தலைவர் ஆய்வு
திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை நகராட்சி குடிநீர் திட்டப் பணிகளை நகராட்சி தலைவர் இரா. ஸ்ரீதரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
நகரப் பகுதியில் குடிநீர் விநியோகம் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் திருவண்ணாமலைக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சமுத்திரம் ஏரி, உலகலாப்பாடியில் இரு திட்டங்கள், சாத்தனூர் அணை ஆகிய பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் போடப்படுகின்றன.
பணியை பார்வையிட்ட ஸ்ரீதரன் கூறியது:
சமுத்திரம் ஏரியில் இருந்து 15 முதல் 18 லட்சம் லிட்டர் தண்ணீரும், உலகலாப்பாடி திட்டம் ஒன்று, திட்டம் இரண்டில் இருந்து 35 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணி இம்மாதத்திற்குள் முடியும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நகருக்கு அதிக அளவு தண்ணீர் வழங்க முடியும் என்றார்.
நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன், உதவியாளர் பழனி உள்ளிடோர் உடனிருந்தனர்.