தினமலர் 06.04.2010
நெடுஞ்சாலை ஓட்டல்களுக்கு சிக்கல் : தரமற்ற உணவு விற்றால் ‘சீல்‘
சிவகங்கை : பழைய, காலாவதியான உணவு பண்டங்களை விற்கும், நெடுஞ்சாலை ஓட்டல்களை (மோட்டல்) ‘சீல்‘ வைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் காலாவதி, போலி மருந்துகளை விற்ற ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் மருந்து கடைகள், மொத்த விற்பனை மையங்களில் திடீர் ஆய்வு நடந்து வருகிறது.
புகார்: மருந்து கடைகளில் சோதனை நடப்பது ஒருபுறம் இருக்க, ஓட்டல், உணவு பண்டம் விற்கும் கடைகள் மீது சுகாதார துறையின் பார்வை திரும்பியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல், டீ கடைகளில் சுகாதாரமற்ற உணவு பண்டம் விற்பதாக புகார்கள் சென்றுள்ளன. இதனால், இக்கடைகளில் உணவு கலப்பட தடுப்பு பிரிவு ஆய்வாளர்கள் சோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
‘சீல்‘: நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டல்களில் சோதனை நடத்தி, சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்களை விற்றால், ‘சீல்‘ வைக்கவும்; கடை உரிமையாளர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.