தினமணி 06.04.2010
எரிவாயு மயானத்துக்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு
வெள்ளக்கோவில், ஏப். 5: வெள்ளக்கோவில், எல்.கே.சி.நகரில் நடைபெற்று வரும் எரிவாயு மின்மயானப் பணிகளுக்கு, ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மொத்தம் 81 சென்ட் பரப்பளவில், மயான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் செலவில், ஏற்கனவே சில பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பின்னர் நிதி ஒதுக்கீடு இல்லாததால் இரண்டு வருடங்களாக பணிகள் முடங்கிக் கிடந்தன.
இந்நிலையில் ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தகன மேடை அமைக்கும் கட்டுமானப் பணிக்காக ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை இந்த ஆண்டே செய்து முடிக்க நிர்வாக அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில் எம்.பி தெரிவித்துள்ளார்.