தினமலர் 07.04.2010
கோடையில் மழை வந்தால் குடிநீருக்கு திண்டாட்டமில்லை
ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களில் கடந்தாண்டை விட குறைந்தளவு நீர் இருப்பு உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. கோடை காலம் துவங்கிவிட்டதால் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், விடுமுறை நாட்களில் கோடை வாசஸ்தலங்களை நோக்கி மக்கள் ‘படையெடுத்து‘ வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில் கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் கோடையின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளில் கோடை வெப்பத்தின் காரணமாகவும், மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பார்சன்ஸ் வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, மேல் கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் நீர் தேக்கங்களில் கடந்தாண்டை விட இந்தாண்டு தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரியில் மழை பெய்து வருவது மக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.