தினமலர் 08.04.2010
சுட்டி காட்டியிருந்தது தினமலர் : மாநகராட்சி புதிய கட்டட வளாகத்தில் ஆங்கில வரவேற்பு வாசகம் அதிரடி அகற்றம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டட நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வரவேற்பு வாசகம் அகற்றப்பட்டுள்ளது.நகராட்சியாக இருந்த தூத்துக்குடி கடந்த 2008ம் வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் செயல்பட்ட குரூஸ் பர்னாந்து பில்டிங்கிலேயே செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாதால் ஏராளமான புதிய அதிகாரிகள், அலுவலர்கள் பணியிடங்களும், பல புதிய துறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பழைய கட்டட பகுதியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் மாநகராட்சிக்கென புதிய அலுவலக வளாகம் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு தற்போது அது முடியும் தருவாயில் உள்ளது. பல நவீன வசதிகளுடனும், வெளிபுறத்தில் அழகி ய புல்வெளியுடனும் இந்த புதிய கட்டட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டட மெயின் நுழைவு வாயிலின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த ஆங்கில வரவேற்பு வாசகம் தமிழ் ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நல்ல காரியங்களை தற்போதைய திமுக., அரசு செய்து வரும் நிலையில், திமுக., தலைமையில் செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மட்டும் எப்படி தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலத்தில் வரவேற்பு வாசகம் வைக்கலாம்? என்று பலர் கேள்வி எழுப்பினர். இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலரும் சுட்டி காட்டியிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஆங்கில வரவேற்பு வாசகத்துடன் கூடிய கண்ணாடி பலகை அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட இடத்தில் அழகிய தமிழில் பொதுமக்களை வரவேற்கும் வாசகத்தை வைத்து தமிழின் பெருமையை மாநகராட்சி நிர்வாகம் போற்ற வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர