தினமணி 08.04.2010
புதுப் பொலிவு பெறும் தஞ்சை சிவகங்கை பூங்கா
தஞ்சாவூர், ஏப் 7: தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் சுற்றுலாத் துறை மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மக்களுக்கு நகரில் உள்ள பிரதான பொழுதுபோக்கு இடங்களில் சிவகங்கை பூங்காவும் ஒன்று. சிறுவர் ரயில், நீச்சல் குளம், படகு சவாரி, நீறுற்றுகள், ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்டவற்றுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுபோக்க ஏற்ற இடமாக இப்பூங்கா உள்ளது.
வார விடுமுறை நாள்களில் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், நாள்தோறும் பூங்காவிற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், ராட்டினம், சறுக்குப் பலகை போன்றவை பழுதடைந்து இருந்தன. தற்போது சுற்றுலாத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இவை அனைத்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ. 5 லட்சத்தில் புதிதாக 5 பைபர் படகுகள் வாங்கப்பட்டுள்ளன. படகு சவாரி செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் படகு சவாரி செய்ய கூட்டம் அதிகமாக வருகிறது.
பூங்காவில் பழுதடைந்திருந்த தாமரை ஊற்று ரூ. 1.10 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரயிலிலும் பழுது இருந்ததால் அதைக் கடந்த வாரம் முதல் இயக்கவில்லை. அதையும் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பில் ரயில் தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டிகளைச் சீரமைத்து வருகின்றனர். இப்பணிகளை விரைவில் முடித்து ரயில் சவாரியை தொடங்க அதிகாரிகள் முனைப்புகாட்டி வருகின்றனர்.
பூங்காவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் குப்பைகள் சேர்ந்து மாசுபடுகிறது. எனவே, கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமித்து பூங்காவை எப்போதும் துப்புரவுடன், அழகுடன் பராமரிப்பதற்கும் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் த. நடராஜனிடம் கேட்டபோது, வியாழக்கிழமைக்குள் சிறுவர் ரயில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு இயக்கப்படும். கூடுதலாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகளை திருப்திகரமாக நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுவது உள்ளிட்ட அறிவிப்புகளை பூங்காவிற்கு வருபவர்கள் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.