தினமலர் 12.04.2010
‘வளர்ச்சி பணியை மேற்கொள்ள பொதுமக்கள் பங்களிப்பு தேவை’
திருப்பூர் : ”வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பும் தேவை,” என, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.திருப்பூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், நல்லூர் நகராட்சி மூன்றாவது வார்டு சென்னிமலைபாளையத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது. திறப்பு விழாவுக்காக, மூன்று மாதம் காத்திருந்தது. பகுதி நேரமாக செயல்படும் அக்கடையை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார். நகராட்சி தலைவி விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: சென்னிமலைபாளையம், புதுப்பாளையம், வஞ்சிவரம்புதூர் பகுதிகளில் வசிக்கும் 529 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவர். திங்கள், செவ்வாய், புதன் மட்டும் செயல்படும். ரேஷன் கடை கட்டுவதற்காக, எட்டு சென்ட் நிலத்தை மூன்றாவது வார்டு கவுன்சிலர் பழனிசாமி அளித்துள்ளார். இவர் போல், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, பொதுமக்கள் முன்வர வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். வளர்ச்சி பணியை விரைவுபடுத்துவதற்கு பொதுமக்கள் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய் மானியம் அளித்து, குறைந்த விலையில் அரிசி வழங்குகிறது தமிழக அரசு. திருப்பூரில் 52 புதிய கடைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 50 கடைகள் திறக்கப்பட்டு விட்டன. பகுதி நேரமாக 11 கடைகளில் 10 கடைகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் புதிதாக கடைகள் துவக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளிலும் கடைகள் துவக்கப்படும். இவ்வாறு, சாமிநாதன் பேசினார்.எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நகராட்சி துணை தலைவி நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.