மாலைமலர் 15.04.2010
அடுத்த மாத இறுதிக்குள் சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை: 537 தமிழ் பெயர்களை மாநகராட்சி வெளியிட்டது
சென்னை, ஏப். 15-
சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், அதன் பிறகு மற்ற மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாதம் (மே) 31-ந் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதற்கான நடவடிக்கை யை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஜோதி நிர்மலா, மண்டல குழு தலைவர் ஏழுமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகி விக்கிரமராஜா, போட்டோ ஸ்டூடியோ என்பதுதான் மக்களுக்கு புரியும். அதை நிழற்பட நிலையம் என்று பெயர் வைத்தால் தெரியாது என்றார்.
அதற்கு பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியம், போட்டோ ஸ்டூடியோ என்பதை தமிழில் எழுதினாலே 75 சதவீதம் வெற்றிதான் என்றார்.
கூட்டத்தில் மேயர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழ் வளர, மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் தாய்மொழியான தமிழுக்கு பிரதான இடம் இல்லாத நிலையே உள்ளது. தமிழ் மேம்பட தமிழ் வளர்ச்சி துறை உருவாக்கப்பட்டது. அந்த துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.
சென்னையில் பூந்தமல்லி ரோடு, அண்ணா சாலையில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை. மற்ற மாநிலங்களில் அவர்களது தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிறகு மொழிகளுக்கு முதலிடம் கொடுத்துள்ளார்கள்.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாதம் (மே) இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் பெயர் பலகைகளில் முதலில் தமிழில் பெரிதாக எழுதப்பட வேண்டும்.
ஏர்டெல், டோக்கமோ போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட வேண்டும்.இல்லாவிட்டால் அந்த நிறுவன பெயர் பலகைகள் அகற்றப்படும்.
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
கூட்டத்தில் 537 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியலை மாநகராட்சி விநியோகித்தது.
அதில் சில முக்கிய தமிழ் பெயர்கள் வருமாறு:-
பார்– மது கூடம், அருந்தகம், பஜார்– கடை தெரு, கடை வீதி, கம்ப்யூட்டர் சென்டர்– கணினி மையம், கூல்டிரிக்ஸ்– குளிர்பானங்கள், குளிர் குடிநீரகம், டிபார்மெண்ட் ஸ்டோர்– பல்பொருள் அங்காடி, எலெக்டிரிக்கல்ஸ்– மின் பொருளகம், எலெக்ரானிக்ஸ்– மின்னகம், மின்னணு பொருளகம்.
என்ஜினீயரிங் இண்டர்ஸ்டிரீஸ்– பொறியியல் தொழிலகம், பேன்சி ஸ்டோர்– புதுமை பொருளகம், பாஸ்ட் புட் –உடனடி உணவு, விரைவு உணவகம், ஐஸ்கிரீம்– பனிகுழைவு, பனி பாலேடு, போட்டோ ஸ்டூடியோ– நிழற்பட நிலையம், பிளாசா– கடை தொகுதி, ரெடிமேட் சென்டர்–அணியபாட்டு கடை, ஸ்நாக்ஸ்– நொறுக்கு தீனி, ஸ்டார் ஓட்டல்– நட்சத்திர உணவகம், உயர் உணவு உறைவுலகம், ஸ்வீட்ஸ் ஸ்டால்– இனிப்பகம், டியூசன் சென்டர்– தனி பயிற்சி நிலையம்.
கூட்டத்தில் மயிலை பெரியசாமி, கவுன்சிலர்கள் மங்கள்ராஜ், நவமணி, வி.பி. மணி, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.