தினமலர் 16.04.2010
கோடை வறட்சியிலும் வற்றாத அக்காமலை : ‘செக்டேம்‘ வால்பாறைக்கு வராது குடிநீர் பஞ்சம்
வால்பாறை : வால்பாறையில் வறட்சி நிலவியபோதும் பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை ‘செக் டேம்‘ நிரம்பிய நிலையிலேயே உள்ளது. வால்பாறை டவுன் பகுதி மக்களுக்கு 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக் டேமிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கருமலை எஸ்டேட்டிலிருந்து வால்பாறை வரை குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடையில்லாமல் மூலிகை மணம் நிறைந்த குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.வால்பாறையில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கும் வகையில் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது புதிய இணைப்புக்கள் கொடுக்கும் பணியும் வேகமாக நடக்கிறது. இந்நிலையில் வால்பாறையில் கடந்தாண்டு பெய்த தென் மேற்குப்பருவ மழையால் அக்காமலை செக் டேம் நிரம்பியது. இதனையடுத்து சோலையாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது, சில மாதங்களாக மழைப் பொழிவு முற்றிலுமாக குறைந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துவருகிறது. ஆனால், வால்பாறை டவுன் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக் டேம் மட்டும் நிரம்பிய நிலையிலேயே உள்ளது. எனவே, இந்த ஆண்டு வால்பாறையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.