தினமலர் 16.04.2010
குடிநீர் பிரச்னையை தீர்க்க திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.2 கோடி
திண்டுக்கல் : ”கொடைக்கானலில் குடிநீர் பிரச்னை இல்லை” என கலெக்டர் வள்ளலார் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை செயலாளர் ஸ்ரீபதியிடம் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டத்தின் 50 ஆண்டு கால சராசரி மழையளவு 836 மி.மீ.,.கடந்த 2009ம் ஆண்டில் 593.43 மி.மீ., மட்டுமே மழை பெய்துள் ளது. வடகிழக்கு பருவமழை இல்லாத நிலையில், தென்மேற்கு பருவ(கோடை)மழை பெய்வதிலும் தாமதம் நீடித்து வருகிறது. மாவட் டத்தின் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர், விவசாய பணிகள் பாதிப்படைந்துள்ளன. குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, மக்கள் குடங்களுடன் ரோடு மறியல், ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடுவது தொடர்கிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் வள்ளலார் உடன், தலைமை செயலாளர் ஸ்ரீபதி ‘வீடியோ கான்பரன்சிங்‘ மூலம் கலந்தாலோசனை நடத்தினார். இதில் மாவட்டத்தின் நீர் ஆதாரம், தற்போதைய நிலை, குடிநீர் பாதிப்புள்ள பகுதி, மாற்று ஏற்பாட்டிற்கான வழிகள் குறித்து கேட்டறிந்தார்.
”வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் பிரச்னைகளுக்கு வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல் நகர் பகுதியில் முன்னதாக 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் இருந்தது என்றும், தற்போது ஒன்பது நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என்றும், பழநியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இருந்த விநியோகம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளதாகவும், கொடைக்கானலில் குடிநீர் பற்றாக் குறை இல்லை” என கலெக்டர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் ஸ்ரீபதி அறிவுறுத்தியுள்ளார்.