தினமலர் 16.04.2010
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கி.கிரிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
கிருஷ்ணகிரி: ”கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என, தமிழக முதன்மை செயலர் ஸ்ரீபதி கலெக்டர் சண்முகத்திடம் வீடியோ கான்ஃபரசிங் மூலம் தெரிவித்தார். தமிழகத்தில் கோடை காரணமாகவும், வெப்பம் அதிகம் உள்ளதாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு வரைவு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசின் முதன்மை செயலர் ஸ்ரீபதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆய்வு நடத்தினார். ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 337 பஞ்சாயத்துகளில் 97 பஞ்சாயத்துகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய யூனியன்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகம் உள்ளது.
அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய மினி பம்ப் அமைக்க வேண்டும்‘ என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார். ”கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பணிகளை மேம்படுத்த 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணியை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்,” என, தலைமை செயலர் தெரிவித்தார்.