தினமலர் 16.04.2010
நகராட்சி நூலகங்களை தரம் உயர்த்த பணியாளர்கள் கழகம் வலியுறுத்தல்
வேலூர்: தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் தாலுகா தலைநகரங்களில் உள்ள நூலகங்களை முதல்நிலை நூலகங்களாக தரம் உயர்த்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வேலூர் மாவட்ட நூலகப் பணியாளர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட நூலகப் பணியாளர்கள் கழக சி மற்றும் டி பிரிவு தலைவர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: பொது நூலகத் துறையில் நகராட்சி மற்றும் தாலுகா தலைநகர நூலகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. இந்த நூலகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லாமல் தினக்கூலி பணியாளர்களை கொண்டு செயல்படுகிறது. இந்த நூலகங்களை முதல்நிலை நூலகங்களாக தரம் உயர்த்தி தர நிர்ணயத்தின்படி முதல்நிலை நூலகர், இரண்டாம் நிலை நூலகர், மூன்றாம் நிலை நூலகர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற புதிய பணியிடங்களை தோற்றுவித்து பணியாளர்களை நியமித்தால் வாசகர்களுக்கும், நூலக வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து நூலகத்துறை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். மேலும், 15 ஆண்டுகள் பணி முடித்த பதிவுரு எழுத்தர்களுக்கு பயிற்சி பெறா மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.