தினமணி 16.04.2010
பொதுப் பணித் துறையிடமிருந்து பெற்றுத் தரக் கோரி துணை முதல்வருக்கு குளித்தலை எம்.எல்.ஏ. மனு
குளித்தலை, ஏப். 15: குளித்தலை நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தை பொதுப் பணித் துறையிடமிருந்து பெற்றுத் தர வேண்டுமென, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. மாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.
குளித்தலை நகராட்சி அலுவலகம் கடைவீதி பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் செயல்பட்டுவரும் இடம் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமானதாகும். அலுவலகத்தில் ஏதாவது மராமத்து மற்றும் கட்டட வேலைகள் நடைபெற வேண்டுமானால் பொதுப் பணித் துறையிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.
எனவே, தற்போது நகராட்சி அலுவலகம் இயங்கி வரும் இடத்தை நகராட்சிக்கே பெற்றுத் தர வேண்டுமென நகராட்சி சார்பில், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. மாணிக்கத்திடம் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து அவர் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்மையில் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
குளித்தலை கடைவீதி பகுதியில் 1997-ம் ஆண்டு வரை அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 25.1.2002 முதல் அந்த இடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
இந்த இடம் 1957-ம் ஆண்டுக்கு முன்பு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சொந்தமானதாக இருந்தது. 1957-ல் ஜில்லா போர்டு நிர்வாகம் கலைக்கப்பட்டதால் இந்த இடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி இயக்குநர் மூலமாக அந்த இடத்தை நகராட்சிக்கே இலவசமாக மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது, சென்னை பொதுப் பணித் துறை தலைமை பொறியாளரிடமிருந்து முதன்மைச் செயலருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தை பொதுப் பணித் துறையிடமிருந்து எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பெற்று இலவசமாக குளித்தலை நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.