தினமலர் 20.04.2010
அனுமதியின்றி தலைவர்கள் சிலை : கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தலைவர்களுக்கு சிலை, நினைவுத்தூண், நினைவு மண்டபம், நினைவு வளைவு அமைத்திட பொது மக்கள் அரசியல் கட்சி முயலுவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. அரசாணைபடி அரசின் ஒப்புதல் பெற வேண்டும். ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை பொறுத்த மட்டில் அச்சிலைகளை நிறுவியவர்களே (சிலை வைத்த சங்கம், பிரிவு, தனிப்பட்டவர் போன்றவர்) பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகள் சீர்குலையாமல் இருக்க அச்சிலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று திரும்பவும் நிறுவுவதை தேவையெனக் கருதப்பட்டால் இது குறித்து அரசிடம் ஆணை பெற்றபின் சம்மந்தப் பட்ட தனி நபர், அமைப்பு போன்றவற்றால் மாற்றி அமைக்கப்படலாம். நிபந்தனைகளை கடைபிடிக்காமல் சிலை அமைக்க முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.