தினமணி 20.04.2010
நகராட்சி எல்லைக்குள்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் பணி தர வலியுறுத்தல்
காரைக்கால், ஏப். 19: காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் காரைக்காலில் இந்த மாத இறுதியிலிருந்து அனைத்து கிராமப் பகுதிகளிலும் முழுமையாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அண்மையில் அறிவித்தார்.
வட்டார வளர்ச்சித் துறை சார்பில் காரைக்காலில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் பணிகள் நடந்து வந்தாலும், போதிய நிதி வந்து சேராததால் மாவட்ட நிர்வாகம் இதை முழுமையாக செய்யாமல் உள்ளது. இந்நிலையில், காரைக்கால் நகராட்சி எல்லைக்கு அப்பால்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இத் திட்டத்தின் கீழ் வேலை தரப்படுகிறது. நகராட்சி எல்லைக்குள்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்தோருக்கு இத் திட்டத்தில் வேலை மறுக்கப்படுகிறது.
அதனால், காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட நிரவி கோயில் பத்து, புதுமனைத் தெரு, அக்கரை வட்டம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அதிமுக காரைக்கால் நகரச் செயலர் ஜி.வி. ஜெயபால் தலைமையில் திரண்டு வந்து மாவட்ட துணை ஆட்சியர் செ. ஆபேல் ரொசாரியோவை திங்கள்கிழமை சந்தித்தனர்.
காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளாக பல கிராமங்கள் உள்ளன. ஆனால், நகரப் பகுதி மக்களுக்கு நிகராக இவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படவில்லை. மாவட்டத்தில் உள்ள எல்லா கிராம மக்களைப்போல் விவசாயம் உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர் இவர்கள். எனவே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காரைக்கால் நகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கும் வேலை தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.