தினமணி 21.04.2010
23-ல் மாநகராட்சி மேயர் தேர்தல்
பெங்களூர், ஏப்.20: பெங்களூர் மாநகராட்சி மன்ற மேயர் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது; பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
÷பெங்களூர் மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக 2007-ம் ஆண்டு மாற்றப்பட்டது. பிறகு முதன் முறையாக கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதிதான் மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 198 வார்டுகளில் பாஜக 111 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
÷பெருநகர மாநகராட்சியின் முதல் மேயராகும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்துள்ளது. மேயர் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் அன்று காலை 8 மணிக்குத் துவங்குகிறது.
÷மேயர் பதவிக்கு பாஜக மூத்த கவுன்சிலர்கள் எஸ்.கே. நடராஜ், சத்தியநாராயணா, கங்கபைரய்யா ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மேயர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பது குறித்து பாஜக தலைவர்கள் வியாழக்கிழமை தீர்மானிக்கிறார்கள். அநேகமாக எஸ்கே நடராஜுக்கு வாய்ப்பு அதிகமிருப்பதாக கருதப்படுகிறது.
÷மேயர் தேர்தல் முடிந்ததும் துணை மேயர் தேர்தல் நடத்தப்படும். மாநகராட்சியில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் மேயர், துணை மேயர் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தவும் வாய்ப்புள்ளது.
÷மேயர் தேர்தல் பற்றிய அறிவிப்பை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எனவே, திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை மேயர் தேர்தல் நடைபெறும். மேயர் தேர்தலுக்கான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மாநகராட்சி எடுத்துள்ளது. மேயர் பதவி பொதுப்பிரிவுக்கும், துணை மேயர் பதவி தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் கட்சிகள் பலம்:
மொத்த இடங்கள்: 198, பாஜக: 111, காங்கிரஸ்: 65, ம.ஜனதாதளம்: 15, சுயேச்சைகள் 7.