தினமலர் 22.04.2010
ஸ்ரீவி., நகராட்சி குடிநீர் வழங்குவதில் சிக்கல்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., நகராட்சியில் மின் சப்ளை கேளாறு காரணமாக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.ஸ்ரீவி., நகராட்சி மக்களுக்கு செண்பகதோப்பு பேயனாற்று பகுதியில் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு சரி வர மழை இல்லாததால் செண்பகதோப்பு பகுதியில் கூடுதலாக எட்டு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் ஓரளவு சீராக வந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் நான்கு நாளுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கிணறுகளில் தண்ணீர் இல்லாததை காரணம் காட்டி திடீரென ஐந்து நாளுக்கு ஒரு முறையாக மாற்றி வழங்கப்பட்டது. அதுவும் மேடான பகுதிக்கு சரிவர வராத நிலையும் உள்ளது. இந்நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக ஆறு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வருமென காத்திருந்த பெண்கள் தண்ணீர் வராததால் தவித்து போயினர்.இது குறித்து ஸ்ரீவி.,நகராட்சி ஆணையர் முத்துக் கண்ணு கூறுகையில் ‘தற்போது 10 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் காற்றுடன் பெய்த மழையில் ஆழ்துளை கிணறு மின் மோட்டாருக்கு செல்லும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் குடிநீர் வழங்குவதில் ஒரு நாள் மட்டும் தாமதம் ஏற்பட்டது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. இதனால் மக்களுக்கு மீண்டும் ஐந்து நாளுக்கொருமுறை வழங்கப்பட்டு வருகிறது‘ என்றார்.