தினமணி 23.04.2010
இன்று பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தல்
பெங்களூர், ஏப்.22: பெங்களூர் பெருநகர மாநகராட்சியின் மேயர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாஜகவைச் சேர்ந்த சாரக்கி வார்டு கவுன்சிலர் எஸ்.கே. நடராஜ் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சியின் எல்லை விரிவடைந்தது. மாநகராட்சியுடன் 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 110 கிராம பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டன.
இதையடுத்து 100 வார்டுகளாக இருந்த மாநகராட்சி மன்ற வார்டுகளின் எண்ணிக்கை 198-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பலமுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மார்ச் 28-ம் தேதி மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடந்தது.
தேர்தலில் 111 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 65 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 15 இடங்களும் கிடைத்தன.
÷7 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து 111 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணை மேயர் பதவிக்கும் பாஜகவைச் சேர்ந்தவரே தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மேயர் பதவிக்கு பாஜக உறுப்பினர்களிடையே பலத்த போட்டி ஏற்பட்டதால், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மேயர் பதவிக்கு எஸ்.கே.நடராஜ், சத்தியநாராயணா, வெங்கடேஷ்மூர்த்தி, கங்கபைரய்யா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. துணை மேயர் பதவிக்கு பென்னிகானஹள்ளி வார்டு கவுன்சிலர் தயானந்தா உள்பட வேறுசில பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.
இறுதியில் மேயர் பதவிக்கு எஸ்.கே. நடராஜையும், துணை மேயர் பதவிக்கு தயானந்தாவையும் நிறுத்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை இவர்கள் இருவரும் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு வேட்புமனுதாக்கல் செய்கிறார்கள். காலை 10 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது. மேயர், துணை மேயர் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.