தினமலர் 24.04.2010
மின் தடையால் குடிநீர் சப்ளைக்கு சிக்கல்
வேலூர்:வேலூரில் மின்தடை காரணமாக குடிநீர் ஆதரங்களில் நீர் இறைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் சப்ளை செய்வதில் மாநகராட்சிக்கு சிக்கில் ஏற்பட்டு வருகிறது.வேலூர் மாநகராட்சிக்கு பொன்னையாறு, பாலாறு, கருகம்பத்தூர், ஒட்டேரி ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு நகரம் முழுவதும் சப்ளை செய்யப் படுகிறது. 4 குடிநீர் ஆதாரங்கள் மூலமாக நாள்தோறும் 114 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது. இதன் மூலம் வேலூரில் உள்ள 48 வார்டுகளுக்கும் முறையே 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ஆனது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தினமும் பல மணி நேர மின் தடை காரணமாக குடிநீர் ஆததரங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 114 லட்சம் லிட்டர் கிடைத்த குடிநீர் இப்போது 84 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.
நீர் வரத்து குறைவால் வார்டுகளுக்கு 6 நாளுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது, ‘குடிநீர் ஆதாரங்களில் அவ்வப்போது மின்தடை காரணமாக குடிநீர் எடுப்பது வெகுவாக குறைந்து விட்டது. எனவே குடிநீர் ஆதாரங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் கூறியுள்ளோம்‘ என்றார்.