தினமணி 24.04.2010
மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தம்பிதுரை எம்.பி. இன்று கலந்தாய்வு
மணப்பாறை,ஏப்.24: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் காவிரிக் குடிநீர் பிரச்னை தொடர்பாக கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை, நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கலந்தாய்வு செய்ய உள்ளார்.
குளித்தலை அருகேயுள்ள மணத்தட்டை அருகில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து ஆழ்குழாய் அமைத்து மணப்பாறைக்கு காவிரி குடிநீர்க் குழாய் வழியாகக் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், இதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 ஆழ்குழாய்க் கிணறுகளில் 8 ஆழ்குழாய்க் கிணறுகள் செயல் இழந்துவிட்டதாகவும், ஓர் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து பெறப்படும் குடிநீரே பயன்பாட்டுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், நகரில் உள்ள 27 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டு, மூன்று நாள்கள் தொடர்ந்து காவிரிக் குடிநீர் வராத நிலையும் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி மக்களைச் சந்திப்பதற்காக வரும் கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை, நகராட்சி அலுவலகத்தில் ஆணையர், நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் குடிநீர் பிரச்னை தொடர்பாக கலந்தாய்வு நடத்த உள்ளார்.