தினமலர் 26.04.2010
மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சல் : நகராட்சி நிர்வாகம் திணறல்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதிகளில், வினியோகிப்படும் குடிநீரை சிலர் மின்மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர். இதனால், பல இணைப்புகளுக்கு தண்ணீர் குறைவாகவே கிடைக்கிறது. ஆய்வு நடத்த, போதிய பணியாளர்கள் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் திணறுகிறது.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை, சில இடங்களில் 15 நாட்களுக்கு பிறகே, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க, அனுப்பர்பாளையம் பகுதியில் மூன்று லட்சம் கொள்ளளவில் புதிய ‘டேங்க்‘ கட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் நகர் டேங்க்கில் இருந்து தண்ணீரை மற்ற வார்டுகளுக்கு பகிர்ந்தளிக்கவும் நகராட்சியினர் பரிசீலித்து வருகின்றனர். மேலும், 30 லட்சம் லிட்டர் குடிநீரை கூடுதலாக கேட்டு பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை, வார்டில் உள்ள சிலர், மோட்டார் வைத்து உறிஞ்சுவதால், பல இணைப்புகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் போகிறது. கோடை தொடங்கி விட்டதால், மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை துவங்கியதில் இருந்து கடந்த ஒன்றரை மாதமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதில்லை. தற்போதுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதற்கு காரணம், மின் மோட்டார் வைத்து சிலர் உறிஞ்சுவதே.
சில பனியன் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்க, 10 அடிக்கும் மேல் தொட்டி கட்டியுள்ளனர். இத்தொட்டியின் நடுவில் சிலாப் மூலம் மோட்டார் அமைத்துக் கொள்கின்றனர். இதில், சத்தம் வரமால் இருக்க பல இடங் களில் மின்மோட்டாரை சாக்கு போட்டு, தகரம் மூலம் பேக் செய்து விடுகின்றனர்.தண்ணீர் வினியோகிக்கப்படும் நேரத்தில், நகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினால் மட்டுமே இத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், ஆய்வு நடத்த முடிவதில்லை. இது, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. இப்பிரச்னையை தீர்க்க கூடுதல் பணியாளர்களை நியமித்து, அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். அனைத்து பகுதியினருக்கும் சரியான விகிதத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.