தினமலர் 26.04.2010
நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: பொது குடிநீர் குழாய் அமைக்க வலியுறுத்தல்
திருப்பூர்: ‘திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி இரண்டாவது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்‘ என்று கூறி, நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி இரண்டாவது வார்டு கல்யாணசுந்தரம் வீதியில் போடப்பட்டிருந்த போர் பழுதாகியுள்ளது. இதனால், பிரசாத் வீதி, கல்யாணசுந்தரம் வீதி, கஸ்தூரிபாய் வீதி, ஆத்துப்பாளையம் ரோடு பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காயத்ரி நகர் முதல் வீதியில் உள்ள போர்வெல்லில் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. இதே வீதியில், நான்கு ஆண்டுக்கு முன் போடப்பட்ட போர்வெல்லில் தண்ணீர் உள்ளது. மேல்நிலைத்தொட்டி வைத்து சப்ளை செய்ய வேண்டும். இப்பணியை செய்ய நகராட்சியினர் முன்வர வேண்டும். காயத்ரி நகர் கிணற்றில் குப்பையை கொட்டியுள்ளனர்; சுத்தம் செய்து, மூடி வைக்கும் பட்சத்தில் தண்ணீரை பயன்படுத்த முடியும். நகராட்சியில் உள்ள பல வார்டுகளில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இரண்டாவது வார்டில் மட்டும் பொது குடிநீர் குழாய் கிடையாது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, காமாட்சி அம்மன் கோவில் சங்கம், சத்யா நகர் பகுதிகளில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், முன்னாள் நகராட்சி தலைவர் அய்யாசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கவுன்சிலர் பாலசுப்ரமணியம் கூறுகையில்,”போர்வெல் பிரச்னையை ஒரு வாரத்துக்குள் சரி செய்து கொடுத்தால் மட்டுமே, தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; விரைந்து முடிந்து கொடுப்பதாக, செயல் அலுவலர் உறுதியளித்துள்ளார்,” என்றார்.
செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறுகையில்,”இரண்டாவது வார்டில் உள்ள போர்வெல்லை சீரமைக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பணி விரைவில் முடிக்கப்படும்,” என்றார்