தினமலர் 26.04.2010
குடிநீர் வடிகால் வாரியத்தில் காலி பணியிடம் : பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு
புதுக்கோட்டை: ‘தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர்களாகவும், டான்சி நிறுவனத்தில் ஃபோர்மேனாகவும் பணியாற்ற விரும்பும் தகுதியுடைய நபர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் தொடர்புகொள்ளலாம்‘ என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவர் ஆவர். பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபின் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருத்தல் வேண்டும். 58 வயதுகுட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
பழங்குடியினர் நாளது தேதி வரை, ஆதிதிராவிடர் 1995 டிச., 31ம் தேதி வரை, கலப்பு திருமணம் செய்துகொண்டோர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட முன்னுரிமை உடையோர் 2006 டிச., 31ம் தேதிவரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியுடையவர் ஆவர். இதனடிப்படையில் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட உள்ள பெயர் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம்பெற்றுள்ளதா? என்பதை அறிய உரிய கல்வி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் தொடர்புகொள்ளலாம்.இதுபோன்று டான்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபோர்மேன் பணியிடமும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ இன் மெக்கானிக் (டி.எம்.இ.,) தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபின் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருத்தல் வேண்டும். பகிரங்க போட்டியினர் 35 வயது, பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம் 37 வயது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
பதிவுமூப்பை பொறுத்தமட்டில் பெண்கள் 2010 மார்ச் 30ம் தேதிவரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியுடையவர் ஆவர். பகிரங்க போட்டியினர் 1997 ஜூலை 28ம் தேதிவரை, முஸ்லீம்கள் 2001 ஜூன் 30ம் தேதிவரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 2000 டிச. 18ம் தேதிவரை, ஆதிதிராவிடர்கள் 1996 ஜூலை ஒன்றாம் தேதிவரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியுடையவர் ஆவர். இதனடிப்படையில் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட உள்ள பெயர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா? என்பதை அறிய உரிய கல்வி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 29ம் தேதி பிற்பகல் இரண்டு மணிக்கு நேரில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.