தினமலர் 28.04.2010
டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு தடை விதிக்க மயிலாடுதுறை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
மயிலாடுதுறை:மயிலாடுதுறை நகரில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.மயிலாடுதுறை நகராட்சிக் கூட்டம் தலைவர் லிங்கராஜன் தலைமையில் நடந்தது. ஆணையர் மோகன், துணைத் தலைவர் சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: செல்வராஜ்: மாந்தோப்பு தெருவில் குடிநீர் குழாய் பழுதடைந்து பல மாதங்களாகிறது. புதிதாக குழாய் அமைத்து தரக்கோரி பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. சித்ரா: எனது வார்டில் கை பம்புகள், மினி பவர் மோட்டார்கள் அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வரவில்லை. இதை சரிசெய்து கொடுக்க வேண்டும்.தலைவர்: குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு உடன் சீரமைத்து தரப்படும். அசோக்குமார்: பஜனமடத்தெருவில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதை அகற்ற வேண்டும்.
அன்பு: நகரில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். நடராஜன்: கூறைநாடு பகுதியில் பட்டமங்கலம் வாய்க்காலில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு தூர்ந்துபோய் உள்ளது. அதை தூர்வார வேண்டும். சத்தியேந்திரன்: குடிசை வீடுகளுக்கு டெபாசிட் இன்றி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
செல்வலட்சுமி: கிட்டப்பா நகராட்சி பள்ளியில் கவுன்சிலர்கள் பெயரை தெரிவித்து கடந்த ஆண்டு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக மக்கள் குற்றம் சாட்டினர். அதுபோல் இந்த ஆண்டு நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.
கமலநாதன்: திருவிழந்தூர் தென்னமரச்சாலை இடத்தை பஸ் ஸ்டாண்ட் வாங்குவதாக கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக கோயிலுக்கு பணம் கொடுத்தாகிவிட்டதா.தலைவர்: கோயில் நிர்வாகத்தினர் பணம் கட்டும்படி அதிகாரபூர்வமாக கடிதம் கொடுக்கவில்லை. அதனால் பணம் இன்னும் கட்டவில்லை.
இருதயராஜ்: செங்கமேட்டுத்தெரு, காந்தி நகர் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்ய வேண்டும்.தனபால்: திருமண மண்டபங்கள் முன்பு சாலைகளில் டிஜிட்டல் பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும். சங்கர்: நகரில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுகிறது. நகராட்சி அனுமதி பெற்று வைக்கின்றனரா? இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைவர்: டிஜிட்டல் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாசிலாமணி: நகரில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாசு: திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோயில் சன்னதிதெருவில் மழைநீர் வடிகால் அமைத்துத்தர வேண்டும். ரகு: திருவிழந்தூர் நகராட்சி பள்ளியில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டடத்தை இந்த விடுமுறையில் போது இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.