தினமணி 28.04.2010
தஞ்சை நகராட்சியில் உரிமக் கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு ?
தஞ்சாவூர், ஏப். 27: வருவாய் அதிகரிப்பு என்ற பெயரில் தஞ்சாவூர் நகராட்சியில் உரிமக் கட்டணங்களை ஏறத்தாழ 10 மடங்கு அளவுக்கு உயர்த்த நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
தஞ்சாவூர் நகராட்சி நிர்வாகத்தில் ஆண்டு இறுதி மாதமான மார்ச் தொடக்கத்தில் மொத்த வரியினங்களில் ரூ. 10 கோடி அளவிற்கு நிலுவை இருந்தது. இந்த வரி பாக்கியில் சொத்து வரியில் ரூ. 4.5 கோடி, குடிநீர்க் கட்டணத்தில் ரூ. 3.04 கோடி, வரியில்லாயினத்தின் கீழ் ரூ. 1.76 கோடி, தொழில் வரியாக ரூ. 1.06 கோடி நிலுவையில் இருந்தன.
இந்த நிலுவைத் தொகைகளை வசூலிக்க நகராட்சி அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஏறத்தாழ 83 சதம் வசூலிக்கப்பட்டுவிட்டது.
சொத்து வரியில் ரூ. 65 லட்சம், குடிநீர்க் கட்டணத்தில் ரூ. 1 கோடி, வரியில்லா இனத்தில் ரூ. 20 லட்சம், தொழில் வரி ரூ. 80 லட்சம் வரை பாக்கி இருந்தபோதிலும், கடந்த ஆண்டுகளில் 68 சதமாக இருந்த வரி வசூல், தற்போது 83 சதமாக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், நகராட்சி நிதிநிலையை அதிகரிக்கச் செய்யும் சில புதிய திட்டங்களை நகராட்சி நிர்வாகம் தீட்டியிருக்கிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் இந்தக் கடóட
ண உயர்வு நடவடிக்கை.
நகராட்சி சட்டப் பிரிவுகளில் உரிமைகள், உரிமையாணைகள் மற்றும் அனுமதிகள் முதலியவற்றிற்கு 2003-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள்தான் இதுவரை வசூலிக்கப்பட்டுவந்தன. இந்தக் கட்டணங்களை வரும் ஜூன் மாதம் முதல் அதிகரித்து வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, தற்போதுள்ள பொது அல்லது தனியாருக்குச் சொந்தமான தெருக்களைச் சார்ந்துள்ள மனைப் பிரிவு பகுதி உள்ளிட்ட தனியாருக்குச் சொந்தமான மனையை உள்பிரிவு செய்ய 500 சதுர மீட்டர் வரை ரூ. 90 என்றிருந்த கட்டணம் இனி ரூ. 500-ஆகவும் 500 சதுர அடிக்கு மேல் 1,000 சதுர அடி வரை ரூ. 135 என்றிருந்த கட்டணத்தை ரூ. 1,000-ஆகவும், 1,000 சதுர அடிக்கு மேல் ரூ. 185 என்றிருந்த கட்டணத்தை ரூ. 1,250 ஆகவும் அதிகரித்து வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதேபோல, பல்வேறு மனைப் பிரிவு தொடர்பான அனுமதிக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.
அதேசமயம், பயன்பாடற்ற வருவாய் இழப்பை ஏற்படுத்திவரும் சில இடங்களில் கட்டணங்களைக் குறைக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கரந்தை அமரர் சுவாமிநாதன் நினைவுச் சந்தையில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் காலியாகவே உள்ள ஐந்து கடைகளின் டேவணித் தொகையை ரூ. 15,000-லிருந்து ரூ. 8,000-ஆகவும் சால்வன்சி தொகையை ரூ. 50,000-லிருந்து ரூ. 25,000-ஆகவும், கூடுதல் வைப்புத் தொகையை ரூ. 25,000-லிருந்து ரூ. 12,000- ஆகவும் நிர்ணயித்து, ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோரவும் தீர்மானிக்கிப்பட்டுள்ளது.
இதுபோல, நகராட்சிக்குச் சொந்தமான திருவள்ளுவர் திரையரங்க வளாகத்தில் ஐந்து ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள நான்கு கடைகளுக்கும் வைப்புத் தொகை குறைக்கப்படவுள்ளது.
இன்று நகர்மன்றத்தில் தீர்மானம்: இந்தத் திட்டத்துக்கான தீர்மானம் புதன்கிழமை நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது.
நகராட்சி நிர்வாகத்தின் வருவாயை உயர்த்த கட்டண உயர்வு நடவடிக்கை தேவை என்றபோதிலும், ஏறத்தாழ 10 மடங்கு அளவுக்கு உயர்த்துவது நியாயமானதாக இருக்காது என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. ஆகையால், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து இத்தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழலாம். எனினும், ஆளுங்கட்சிக்கு முழுப் பெரும்பான்மை உள்ளதால், இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது.