தினமணி 29.04.2010
பிறப்புச் சான்றிதழை ஏப்ரல், மே மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம்
சேலம், ஏப். 28: குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல், மே மாதங்கள் பிறப்புச் சான்றிதழை இலவசமாக வழங்கும் மாதங்களாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் குழந்தைகள் இறப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் நிர்மல்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
சேலம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 56 ஆயிரம் பிறப்புகளும், 18 ஆயிரத்து 500 இறப்புகளும் நிகழ்கின்றன. இதில் 1 சதவீதம் பிறப்புகளும் 7 சதவீதம் இறப்புகளும் பதிவு செய்யப்படாமல் விடுபடுகின்றன. எனவே அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளையும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிறப்பு இறப்புகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
மேலும் 1.8.2009 முதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தனி பிறப்பு, இறப்பு பதிவுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதார மேற்பார்வையாளர் பிறப்பு, இறப்புப் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டு உடனுக்குடன் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
பிறப்பு, இறப்பு மற்றும் இறந்தே பிறக்கும் குழந்தைகள் போன்ற நிகழ்வுகளை, நடைபெற்ற 21 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் பிற்காலத்தில் பள்ளி சேர்க்கை, வாரிசு சான்றிதழ் பெறுதல் போன்ற முக்கியமான பணிகளைச் சிரமமின்றி முடிக்கலாம்.
எனவே பிற்காலத்தில் இடையூறுகளையும் சிரமங்களையும் தவிர்க்க உடனுக்குடன் பிறப்பு இறப்புகளை பதிவு செய்ய வேண்டும். தவறுவோர் மீது பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிறப்பை பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், குழந்தைகளுக்கு பெயர் வைத்தவுடன் பெயர் பதிவும் மேற்கொள்ள வேண்டும். ஓராண்டிற்கு மேல் பதிவு மேற்கொள்ள ரூ.5 தாமதக் கட்டணமாகச் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். எனவே பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மேல் பெயர் பதிவு செய்ய இயலாது. மேலும் பெயர் பதிவில்லாமல் பெறப்பட்ட பிறப்பு சான்றுகள் உபயோகமற்றது என்பதையும் பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பெயர்ப் பதிவுகளை பிறப்பை பதிவு செய்த அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ள இயலும். எனவே சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்களை (கிராம பஞ்சாயத்துகளில் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார மேற்பார்வையாளர்கள்) அணுகி பெயர் பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் மாதம் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்களாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரு மாதங்களிலும் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக ஒரு பிரதி பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்யும்போது பெயர் மற்றும் இதர தகவல்களை பிழையின்றி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் பெயரில் எந்த மாற்றத்தையும் பிற்காலத்தில் மேற்கொள்ள இயலாது. விபத்து, தற்கொலை, கொலை போன்றவற்றால் நிகழும் விசாரணைக்குள்பட்ட இறப்புகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விசாரணை அலுவலரால் உரிய காலக்கெடுவுக்குள் பதிவு செய்வதற்கான தகவல் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் வ. கலை அரசி, வருவாய் கோட்டாட்சியர்கள் எம்.ஜி. குழந்தைவேலு, வ. சிராஜுன்னிசா, பி.வேலு, எம்.ஆர். சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்