தினமலர் 04.05.2010
பொள்ளாச்சி திரு.வி.க., மார்க்கெட் இடத்தில் தொடர்கிறது பிரச்னை: நிரந்தர தீர்வுக்கு வழி என்ன?
பொள்ளாச்சி: பொள்ளாச்சி திரு.வி.க., மார்க்கெட் இடத்தில் இருசக்கர வாகன ஸ்டாண்ட் அமைப்பது, மார்க்கெட்டை காலி செய்வது போன்ற பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பின்பக்கத்தில் வெங்கடேசா காலனி செல்லும் ரோட்டில் 84 சென்ட் பரப்பில் திரு.வி.க., õர்க்கெட் அமைந்துள்ளது. பெரும்பாலான இடத்தில் ஷெட் அமைத்து பொருட்கள் சேமிப்பு இடமாக உள்ளது. காய்கறி கடைகள் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு, சுரங்க நடைபாதை பணிகள் துவங்கியுள்ளதால் பாலக்காடு ரோட்டில் வரும் பஸ் மற்றும் வாகனங்கள் வெங்கடேசா காலனி ரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், திரு.வி.க., மார்க்கெட் அருகில் ரோட்டோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன. நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி ரோட்டை ஒழுங்குபடுத்தினர். பஸ் ஸ்டாண்டினுள் இயங்கி வந்த நகராட்சி இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்டது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து அகற்றப்பட்ட இருசக்கர வாகன நிறுத்தும் ஸ்டாண்டை திரு.வி.க., மார்க்கெட்டில் 30 சென்ட் இடத்தில் அமைக்கவும், மீதமுள்ள 54 சென்ட் இடத்தில் மார்க்கெட்டை செயல்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், திரு.வி.க., மார்க்கெட்டை ஏலம் எடுத்தவரும், காய்கறிக்கடைக்காரர்களும் அங்கு இருசக்கர வாகன ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்க முன்வரவில்லை. நகராட்சி அதிகாரிகள் பலமுறை பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. குத்தகை இனங்கள் இந்தாண்டு ஏலம் விட்ட போது திரு.வி.க., மார்க்கெட் ஏலம் விடப்படவில்லை. மார்க்கெட் உள்ள இடம் முழுவதிலும் இருசக்கர வாகன ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், மார்க்கெட் ஏல இனத்தில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் அறிவித்தனர்.நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்தது. திரு.வி.க., மார்க்கெட்டை வாகனங்கள் நிறுத்தும் ஸ்டாண்டாக மாற்ற கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்து தீர்மானத்தை ஒத்தி வைத்தனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது: திரு.வி.க., மார்க்கெட்டை நம்பி ஏழை மக்கள் நிறைய பேர் வாழ்கின்றனர். எனவே, இருசக்கர வாகன ஸ்டாண்ட் அமைக்க எடுக்க வேண்டாம். வியாபாரிகளிடம் பேச்சு நடத்தி வாகனங்கள் நிறுத்தும் ஸ்டாண்ட் அமைக்க ஒத்துழைக்குமாறு பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி, இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஸ்டாண்ட் அமைத்து மீதமுள்ள 54 சென்ட் இடத்தில் மார்க்கெட் கடைகளுக்கு செட் அமைக்கலாம்‘ என்றனர். அதிகாரிகள் கூறியதாவது: மார்க்கெட் இடத்தின் ஒரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஸ்டாண்ட் அமைக்கலாம் என்று தெரிவித்தபோது ஏலதாரரும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சி பார்க்கிங் ஸ்டாண்ட் அத்தியாவசிய தேவையாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் பின்பக்கமுள்ள நாச்சிமுத்து பிரசவ விடுதி, வெங்கடேசா காலனி வாட்டர்டேங்க் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தும் ஸ்டாண்ட் அமைப்பது பாதுகாப்பற்றது என்பதால் திரு.வி.க., மார்க்கெட் அமைந்துள்ள 84 சென்ட் இடத்தையும் பார்க்கிங் ஸ்டாண்ட் அமைக்க எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிடப்பட்டது. மார்க்கெட் வியாபாரிகளிடம் கவுன்சிலர்கள் பேச்சு நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னையில் இன்னும் நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.