தினமலர் 04.05.2010
இன்று கூடுகிறது கோபி நகராட்சி கூட்டம் மக்கள் நலப்பணிகள் மீண்டும் துவங்குமா?
கோபிசெட்டிபாளையம்: மக்கள் நலப்பணிக்கான தீர்மானங்கள் ஏதும் மூன்று மாதமாக நிறைவேறாத நிலையில், கோபி நகராட்சி கூட்டம் இன்று காலை நடக்கிறது. கோபி நகராட்சியை சேர்ந்த ஐந்து கவுன்சிலர்கள் தி.மு.க.,வுக்கு தாவிய பிறகு, கோபி அரசியல் களம் சூடுபிடித்தது. ஃபிப்ரவரி 25ம் தேதி கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து தீர்மானங்களையும் தலைவர் பொறுப்பில் இருந்த துணைத் தலைவர் மோகனாம்பாள் நிராகரித்தார்.
மார்ச் மாதம் 31ம் தேதி நடந்த கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 17 கவுன்சிலர்களை ‘சஸ்பெண்ட்‘ செய்யப்பட்டனர். அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றி தலைவர் ரேவதி தேவி அறிவித்தார். ஆனால் ‘மினிட்‘ புத்தகத்தில் பதிவு செய்யாததால், அக்கூட்டம் தீர்மானங்கள் குறித்து முடிவு செய்யப்படாத கூட்டமாக அமைந்தது. தி.மு.க., காங்., மற்றும் அ.தி.மு.க., இடையே ஏற்பட்டுள்ள ‘ஈகோ‘ மோதலால் ஏப்ரல் மாதம் நகராட்சி கூட்டம் நடக்கவில்லை. பரபரப்பான நிலையில், இன்று காலை 11 மணிக்கு கோபி நகராட்சி கூட்டம் தலைவர் ரேவதி தேவி தலைமையில் நடக்கிறது. இக்கூட்டம் குறித்து முடிவு செய்ய கோபி நகராட்சியை சேர்ந்த தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சத்தி ரோட்டில் உள்ள பயணியர் மாளிகையில் நடந்தது.
‘காலைக்கதிர்‘ நாளிதழில், ‘தீர்மானங்களை நிறைவேற்றாமல் உள்ளதால் நகர வளர்ச்சி பணிகள் பாதிப்பு‘ என வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முக்கிய தீர்மானங்களையாவது நிறைவேற்ற வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். இறுதியாக இன்றைய நகராட்சி கூட்டத்திலும் தீர்மானங்களை எதிர்க்க வேண்டும் என தி.மு.க., காங்., தரப்பில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. கடந்த இரு கூட்டங்களில் வைக்கப்பட்டிருந்த பல தீர்மானங்கள் இன்றைய கூட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. இதனால், இன்றைய கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களையும், தி.மு.க., காங்., கட்சி கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்ப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 31ம் தேதி கூட்டத்தில் தலைவர் ரேவதிதேவியால் ‘சஸ்பெண்ட்‘ செய்யப்பட்ட தி.மு.க., மற்றும் காங்., கட்சியை சேர்ந்த 17 கவுன்சிலர்களுக்கும், இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கோபி சட்டசபை தொகுதியை உள்ளடைக்கிய திருப்பூர் எம்.பி., தொகுதி, கோபி சட்டசபை தொகுதி, கோபி நகராட்சி ஆகியவை அ.தி.மு.க., வசம் உள்ளது. மேலும் கோபி நகராட்சியில் அதிக கவுன்சிலர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், கடந்த மூன்று மாத காலமாக எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியவில்லையே என்ற விரக்தியில் அ.தி.மு.க., வினர் உள்ளனர். இன்றைய கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அ.தி.மு.க., உள்ளது. இதனால் கோபி நகராட்சியில் இன்றைய கூட்டம் பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.